×

வைகை ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்: தண்ணீர் குழாய்களை மாற்ற கோரிக்கை

 

மதுரை, நவ. 27: மதுரையில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் வைகை ஆற்றில் இருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றும் பணி மூன்றாம் நாளாக நேற்றும் தொடர்ந்தது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மூல வைகையாறு ஆகியவற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த, 10ம் தேதி வைகை அணை முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது. அணையில் இருந்து மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன் 6 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றில் தண்ணீர் வந்ததால். வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது, நாளொன்றுக்கு மூன்றாயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றில் நீர்வரத்து சீராக இருக்கும் வகையில் மதுரை நகரில் தண்ணீர் செல்ல தடையாக இருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

பெரியாறு வடிநிலக்கோட்ட உதவி பொறியாளர் சேகரன் தலைமையில், பணி ஆய்வாளர் தங்கவேலு உட்பட அதிகாரிகள் ஆற்றில், 270 மீட்டர் அகலம், 200 மீட்டர் நீளத்திற்கு ஆக்கிரமித்திருந்த ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை சுமார், 1 டன் அளவுக்கு மேல் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன. கல்பாலம் பகுதியில் ஆற்றில் தண்ணீர் தடையின்றி செல்ல, ராட்சத குழாய்கள் பொருத்த வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

The post வைகை ஆற்றை ஆக்கிரமித்த ஆகாயத்தாமரைகள் அகற்றம்: தண்ணீர் குழாய்களை மாற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vaigai River ,Madurai ,Vaigai ,Madura ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு